நாடு திரும்புதல் தொடர்பில் , பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு சென்றவர்களுக்கே முன்னுரிமை
கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஆயினும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர்,
“இத்தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பில், வெளிவிவகார அமைச்சுடன் பேச்சு இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் ஆராய்ந்தபோது, இவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் வருகை தர விருப்பம் இல்லாதவர்களாக காணப்படுகின்றனர்.
இவர்களில் சிலருக்கு வெவ்வேறு காரணங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் இருப்பதால், அவர்களுக்கு வருகை தருவதற்கு அந்நாடுகளில் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இன்னும் பெரும்பாலானோர் வீசா இன்றி தங்கியிருப்பதால், அவர்களுக்குச் சட்டபூர்வமான பிரச்சினைகள் இருக்கின்றன. காரணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அனைவரும் இலங்கையர்கள் எனும் வகையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம்.
சட்டவிரோதமாகவோ அல்லது, வேறு வழிகளிலோ அல்லது, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்று வீசா இல்லாமல் சிக்கித் தவிப்பவர்கள் அனைவரும் எமது நாட்டவர்களாக இருப்பதால், அவர்கள் எவரையும் நாம் மறக்க மாட்டோம். அவர்கள் அனைவரையும் விரைவாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.
Comments are closed.