வேகமாக பரவும் குரங்கு அம்மை… விமான நிலையங்களில் கெடுபிடி… தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு

குரங்கு அம்மை ஆப்பிரிக்கா தவிர பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பிற இடங்களிலும் பரவி வருவதால் இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் எனவே குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், உடலில் தடிப்புகள் இருப்பவர்கள், குரங்கு அம்மை இருக்கும் நாட்டுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள், குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகப்படும் ந்பர்கள் அனைவரும் தடிப்புகள் நீங்கி புதிய தோல் உருவாகும் வரை அல்லது மருத்துவர் கூறும் வரை தனிமையில் இருக்க வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இவர்களின் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

நோயாளியின் ரத்தம், சளி மற்றும் கொப்பளங்களிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்ப்பட வேண்டும்.
குரங்கு அம்மை ஒருவருக்கு உறுதியானால் அவருடன் கடந்த 21 நாட்களில் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் என்றுள்ளனர்.

மேலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு எந்த நாட்டிலிருந்தும் வரும் வெளிநாட்டு பயணிகள் காய்ச்சல் தலைவலி தசை வலி மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் வந்தால் அவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து வரும் அறிகுறி கொண்ட பயணிகளுக்கு கண்டிப்பாக மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.