தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ரூ. 9,602 கோடியை வழங்கிய மத்திய அரசு
2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டபோது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் தெரிவித்திருந்தது. ஆனால், மாநிலங்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துவந்தன.
தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஓராண்டு கால ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை கேட்கும் நிலை தொடர்ந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் மேடையில் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில், தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 86,912 கோடி ரூபாயை மத்திய அரசுவிடுத்துள்ளது. அதில், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 9,602 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மே 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள தொகையை மத்திய அரசு விடுவித்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.