சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு… அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள நிலையில், எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாளோன்றுக்கு 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
தொற்று அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தொற்று குவியல்கள் (corona cluster) எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல் மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் போன்றவற்றிலும் தொற்று பரவுகிறது. எனவே, கவனத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த நோய் பாதிப்பு அதிகரித்திப்பதை பார்க்க வேண்டும். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதனை உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியினால் பாதிக்காது என்பதையும் குறிக்கலாம்.
அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.