ஸ்டாலின் கருத்து: அலட்டமாட்டோம்! பந்துல கூறுகின்றார்.
“கச்சதீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது அவரின் தனிப்பட்ட கருத்து. இந்நிய அரசின் நிலைப்பாடு அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, ‘இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்வொன்றின்போது, இலங்கை வசமுள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?” என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
“ஒவ்வொரு நாட்டிலும் மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம். உதாரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் வகித்தபோது, அவர் பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அரசின் நிலைப்பாடு அல்ல. அவற்றை அரசின் நிலைப்பாடாக சர்வதேசமும் ஏற்காது. அந்தவகையில் தனது தனிப்பட்ட கருத்தை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கலாம். இது தொடர்பில் பிரதமர் மோடி எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லை என்பதை அறியமுடிகின்றது” – என்றார்.