தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதே பாஜக நிலைப்பாடு – நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகவும் சட்டமன்ற குழு தலைவராகவும் நயினார் நாகேந்திரன் இருந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணைத்தலைவர் பதவி திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து அவர் சட்டமன்ற குழு தலைவராக நீடிக்கிறார். இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான அவர் நெல்லையில் நடைபெற்ற திருமண விழாக்களில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், சசிகலா பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் முழு மனதோடு வரவேற்போம் பாஜக வலுப்பெறும். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும் எனினும் அவர் அதிமுகவில் இணைந்தாலும் அக்கட்சியும் பலம் பெறும் என தெரிவித்தார். அவருக்கென தொண்டர் பலம் இருப்பதால் எங்கு சேர்ந்தாலும் அக்கட்சி சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு பழுத்த பழம் இருக்கும் மரம் தான் கல் எறி படும். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தற்போது அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல்வேறு கட்சியினர் பாஜக மீது விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் வளரவே முடியாது இரு மொழி கொள்கையை ஆதரித்தால் மட்டுமே வளர முடியும் அதிமுகவை விண்ணுக்கு தள்ளும் முயற்சியில் பாஜக செயல்படுகிறது என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் விமர்சித்து இருந்தார் இதுகுறித்து நாம் கேள்வி எழுப்பிய போது அவருடைய விமர்சனம் குறித்து நான் பதில் ஏதும் அளிக்க விரும்பவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாகவும் இருமொழிக் கொள்கை முடிவு தான் தமிழகத்திற்கு சரியாக இருக்கும் என்று பதிலளித்தார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 25 தொகுதிகளுக்கு மேல் தமிழகத்தில் இருந்து வெற்றி பெறுவோம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி பலமாக இருக்கிறது எனினும் சசிகலா குறித்தும் பொன்னையன் மீதான விமர்சனம் குறித்தும் தான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தனது சொந்த கருத்துக்கள் என்றும் பதிலளித்தார்
பாரதிய ஜனதா கட்சியில் சசிகலாவை சேர்த்துக் கொள்வோம் என நயினார் நாகேந்திரன் பேசியதை அடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் கட்சியினுடைய கருத்துக்கள் இல்லை என கூறிய நிலையில் இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்