உணவுப் பஞ்சத்துக்குத் தீர்வுகாண பிரதமரால் விசேட வேலைத்திட்டம்.
நாடு எதிர்கொள்ள நேரும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் விசேட திட்டமொன்றை அடுத்த மாதம் வெளியிடப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தற்போதைய உணவுப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
பிரதமருடனான நேற்றைய சந்திப்பில் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி மலின் ஹெர்விக் இருவரும் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய உணவுப் பற்றாக்குறை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது மேற்படி பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர் விவசாயத்துறையானது தற்போது உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டையே எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். எவ்வாறாயினும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகர் பிரதேச விவசாய வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் இதன்போது எடுத்துரைத்தார்.
உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொகுக்கப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் விளக்கினார். இந்தத் திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இந்த முயற்சிக்கு ஆதரவை வழங்கும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
சாத்தியமான உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நகர்ப்புற விவசாய உற்பத்தி முயற்சியையும் பிரதமர் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
உரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க விவசாய சமூகத்துக்கு உதவும் புதுமையான விவசாய உதவித் திட்டத்தைத் தொகுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் இதன்போது விளக்கமளித்தனர்.
நன்கொடையாளர்கள் நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளனர் எனவும், நகர்ப்புற விவசாயத் திட்டம் மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டால் அதிக நிதி உதவி வழங்கப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.