எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது – பாஜக திடீர் அறிக்கை
பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பாஜக தேசிய பொது செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக கடந்த சில நாள்களாகவே விவாதம் எழுந்து வருகிறது.
நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சு பின்னணியில் பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எந்த மதத்தையோ, பிரிவையோ அவமதிக்கும் விதமான பேச்சை பாஜக ஒருபோதும் ஏற்காது. இது போன்று பேசுபவர்களை பாஜக ஒருபோதும் அங்கீகரிக்காது. ஆயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் அனைத்து மதங்களும் வளர்ந்து தழைத்தோங்கின. எனவே, பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மதத்தை இழிவுபடுத்துபவர்களை பாஜக நிராகரிக்கிறது.
இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி மரியாதையுடன் அவர்களின் மதங்களை பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், அனைவரும் ஒற்றுமையுடனும் கண்ணியத்துடனும் வாழ்ந்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அனுபவிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது” என அறிக்கையில் கூறியுள்ளார்.