சிறைச்சாலைகளில் எஸ்.ரி.எப். பாதுகாப்பு

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தும் நடவடிக்கை, எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலை மதில்களின் மேலால் சட்டவிரோதமாக பொருட்கள் சிறைச்சாலைகளினுள் வீசப்பட்ட சம்பவங்கள் அண்மைக் காலத்தில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது உட்பட சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.