சர்ச்சைகுரிய யூடியூப் வீடியோக்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சர்ச்சைகுரிய YouTube வீடியோக்களை உடனடியாக தடை செய்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சைபர் க்ரைம் SP புகார் அளித்தவுடன் சர்ச்சைக்குரிய யூடியூப் சேனலை தடை செய்திட வேண்டும் என்றும், அப்போது முதல் தகவல் அறிக்கையை (FIR Copy) கொடுத்தால்தான் வீடியோ தடை செய்யப்படும் என நிர்வாகம் கூறினால் அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சி சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சாட்டை துரை முருகன் யூடியூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் சாட்டை துரைமுருகன் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டார்.இதை அடுத்து திருப்பனந்தாள் போலீசாரால் துரைமுருகன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றம், ‘இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன்’ என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மீண்டும் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியது குறித்து எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதை படித்த பார்த்த பிறகு, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை ஊக்கப்படுத்த முடியாது.
அவர் பேசி உள்ள வார்த்தைகளை என்னால் நீதிமன்றத்தில் உரக்க படிக்க முடியவில்லை. உங்களால் ஆக்கபூர்வமாக பேச முடியாதா?
சமூக வலைதளமான யூடியூப் வைத்துக்கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் அவதூறாக பேசலாமா? வெடி குண்டு தயாரிப்பது எப்படி? துப்பாக்கி தயாரிப்பது எப்படி? என தடை செய்யப்பட வேண்டிய வீடியோக்கள், தடையின்றி உலா வருகின்ற என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, யூடியூப்பில் வரும் வீடியோக்களை ஒழுங்கபடுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், நீதிபதி புகழேந்தி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், சர்ச்சைகுரிய யூடியூப் வீடியோக்களை உடனடியாக. நிர்வாகம் தடை செய்திட வேண்டும். யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் YouTube video வந்தால், சைபர் க்ரைம் எஸ்.பி (SP) YouTube நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அந்த YouTube சேனலை தடை செய்ய வேண்டும் என மனு அளித்த உடனே, அந்த யூடியூப் வீடியோவை தடை செய்திட வேண்டும்.
மாறாக, சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோ குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, அதை (FIR COPY) கொடுத்தால் தான் சர்ச்சைகுரிய வீடியோவை தடை செய்வேன் என யூடியூப் நிர்வாகம் கூறினால் அதை ஏற்க முடியாது. இந்த கால தாமத்திற்குள் YouTube மூலம் வீடியோ உலகம் முழுவதும் பரவி விடும்.
எனவே, சைபர் க்ரைம் SP கூறியவுடன், உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர்புடைய யூடியூப் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்ய வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, தற்போதுள்ள சைபர் க்ரைம் சட்டங்கள், IT சட்டங்களை, தீவிரமாக நடை முறைப்படுத்த வேண்டும்.
விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் , சாட்டை துரை முருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.