முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தமிழகத்தில் அகதி தஞ்சக் கோரிக்கை.
விமானம் மூலம் தமிழகம் சென்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமிழகத்தில் அகதி தஞ்சக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின் தட்டுப்பாடு காரணமாக நேற்று திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் புறப்பட்டு சென்னை ஊடாக இராமேஸ்வரத்தைச் சென்றடைந்தார்.
தனுஸ்கோடி ஊடாக வந்தார் என்று முதலில் மெரன் பொலிஸாரிடம் தெரிவித்தபோதும் பொலிஸாரின் விசாரணை மூலம் விமானம் மூலம் வந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் சென்று அனுமதி பெற்று வருமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தினர்.
குறித்த நபர் 6 ஆண்டுகள் இலங்கைப் பொலிஸில் 6141 இலக்கத்தில் பணியாற்றினார் என்று விசாரணையின்போது தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை தமிழகத்துக்கு 84 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.