இந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு -விவசாய அமைச்சு.
ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்குள், இந்தியாவிடமிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கை பெறும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் அமைச்சின் விவசாயத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வில் உரையாற்றும் போதே இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, வெளியிட்டார்.
ஓமானிலிருந்து இந்தியாவின் பயன்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட யூரியா உரமே விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு மூன்று நாட்களுக்குள் யூரியாவை விவசாயிகளுக்கு விநியோகிக்க விவசாய அமைச்சு விவசாய சேவை விநியோக முகவர், இலங்கை உர செயலகம், கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் சிலோன் பெர்டிலைசர் நிறுவனம் போன்ற விநியோக வழிகளைப் பயன்படுத்தும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
ஒரு மூடை யூரியா விவசாயிகளுக்கு ரூ.10,000க்கு விற்கப்படும் என்றும், விவசாயத் துறை பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் நிலையான விலைக்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விலையை முன்வைத்தபோது அமைச்சரவை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.