சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய நபர்.. விசாரணையில் கதையை கேட்டு கலங்கிப் போன போலீசார்!
ஐந்து நாள் பசி… அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. அதனால் சாப்பாட்டிற்கு நகையையை திருடி கைதானவர் சிறை என்றதும் சந்தோஷமாக சென்றுள்ளார். அங்கு உணவு கிடைக்கும் என்பதுதான் அதற்கு காரணம்….
தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் உள்ள தனது வீட்டில் 70 வயதான மூதாட்டி ராதிகா தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ரெண்டு தட்டு தட்டி விசாரிக்கலாம் என நினைத்த போலீசார், குற்றவாளியின் மெலிந்த உடல் மற்றும் பரிதாபமான தோற்றத்தைக் கண்டு இரக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து நாட்களாக சாப்பிடவில்லை என அவர் கூறியதும் கலங்கிப் போன காவலர்கள் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளனர். பசியாறிய பின், வந்தவாசியைச் சேர்ந்த மோகன குமார் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது கதையை கூறத் தொடங்கியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வேலை தேடி வந்த மோகன குமாருக்கு கொரோனா காலம் என்பதால் வேலை கிடைக்கவில்லை . ஊருக்கும் செல்ல முடியாமல் சாலையோரம் தங்கிய அவருக்கு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் உணவளிக்க, அதில் சுகம் கண்டு அப்படியே சாலையோரம் தங்கி விட்டார்.
3 வேலை அன்னம் கிடைக்க வேலைக்கு செல்லும் எண்ணத்தை மறந்தே போனார். கடந்த சில மாதங்களாக போதிய உணவு கிடைக்காமல் உடல் மெலியத் தொடங்கியுள்ளது. சில நாட்களாக தொடர்ந்து சாப்பிடாத நிலையில், மூதாட்டியின் கழுத்தில் உள்ள நகையை பார்த்தபோது, அதை பறித்தால் விற்று கிடைக்கும் பணத்தில் பல மாதங்கள் பசியாறலாம் என நினைத்துள்ளார்.
திட்டப்படியே தங்க நகையை பறித்தாலும் பசியால் ஓட முடியாத நிலையில் சிக்கிக் கொண்டார். கதையை கேட்டு கலங்கிப் போன காவலர்கள், பசிக்காக திருடினாலும் குற்றம் குற்றமே என கூறி நீதிபதியிடம் ஆஜர்படுத்த, அவர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது, சிறையில் உணவு அளிப்பார்களா என ஆர்வமாக கேட்ட மோகன குமார், உணவு அளித்தால் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருப்பேன் என சந்தோஷமாக கூறியிருக்கிறார்.
ஜெயிலுக்கு போனால் வேளை தவறாமல் சாப்பிடலாம் என நகைச்சுவைக்காக கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே ஒருவர் அப்படி இருந்ததைக் கண்டு காவலர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.