கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒருநாள் பாதிப்பு நேற்று 200ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை சுகாதாரத்துறை , உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும் போதிய பரிசோதனைகள் தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.