“தொலைத்து விடுவேன்…” – காவல் அதிகாரியை மிரட்டிய நாராயணசாமி…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரிக்க அழைத்துள்ளதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர், காந்தி வீதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது, அலுவலகத்தின் உள்ளே நுழைய காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த பெரிய கடை ஆய்வாளர் கண்ணன், சக போலீசாரை பார்த்து தடுப்பு கட்டைகளை அமைக்காதது ஏன் என கேட்டு திட்டியுள்ளார்.
இதனை கவனித்த காங்கிரஸ் கட்சியினர், தங்களை திட்டுவதாக நினைத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த நாராயணசாமி, போலீசாரை பார்த்து,“தொலைத்து விடுவேன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்” என்று மிரட்டியதால் செய்வதறியாது காவலர்கள் திகைத்து போய் நின்றனர். இந்த போராட்டத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் மீது பொய் வழக்கு போட்டு அரசியல் ஆதாயத்துக்காக மத்திய பாஜக அரசு மிரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
காங்கிரஸ் போராட்டம்
2024ல் அனைத்து கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகிறோம். இதை முறியடிக்க பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார். புதுச்சேரி முதலமைச்சர் உண்மையான முதலமைச்சராக செயல்படவில்லை. டம்மியாக செயல்படுகிறார். சூப்பர் முதலமைச்சராக தமிழிசை செயல்படுகிறார். அவர்தான் அனைத்துக்கும் பதில் தருகிறார்.
புதுச்சேரியில் 5 முதலமைச்சர்கள் உள்ளனர். கவர்னர், ரங்கசாமி, நமச்சிவாயம், சபாநாயகர், சாய்சரவணன் என 5 முதலமைச்சர் உள்ளனர். ரங்கசாமி அதிகாரத்தை செலுத்தாததால் அவருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.