100 வீடுகள் கொண்ட கிராமத்தில் 100 சமாதிகள் – முன்னோர்களை மறக்காமல் போற்றும் கிராமம்
சமாதி இருக்கும் இடத்திற்கு செல்லும்போது மனதில் ஒரு பயம் ஏற்படுவது சகஜம். ஆனால் ஒரு சிறிய கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் நான்கிற்கும் மேற்பட்ட சமாதிகள் உள்ளன. ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் எமிகனூர் மண்டலத்திலுள்ள அய்யகொண்டா கிராமம் தான் இந்த வித்தியாசமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
மரணமடைந்த முன்னோர்களை அடுத்து அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லாமல் எந்த ஒரு சிறிய வேலையையும் செய்ய கூடாது என்பதற்காகவும் காலகாலமாக எமிகனூர் கிராம மக்கள் இந்த வினோத நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் சமைத்த பின் தங்கள் உணவுகளை வீட்டின் முன் இருக்கும் தங்கள் முன்னோர் சமாதிக்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு படைத்தபின் மட்டுமே சாப்பிடுகின்றனர். இது தவிர கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கும் போது சமாதிகளுக்கும் நைவேத்திய சமர்ப்பணம் நடைபெறுகிறது.
இது தவிர தங்கள் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நிச்சயக்கப்பட்டால் மணமக்களுக்கு உரிய புத்தாடைகளை முன்னோர்களின் சமாதியில் வைத்து பூஜைகள் நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை அந்த கிராமத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதனால் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் குறைந்தபட்சம் நான்குக்கும் மேற்பட்ட சமாதிகள் உள்ளன. சமாதிகள் நிறைந்த அந்த கிராமத்தை கடந்து செல்லும் வெளியூர் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். வெளியூர்களை சேர்ந்தவர்கள் உச்சி வெயில் நேரம், நள்ளிரவு தாண்டிய பின்னர் அந்த கிராமத்திற்கு செல்வதையும், அந்த கிராமம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்வதையும் ஒருவித அச்சம் காரணமாக தவிர்த்து விடுகின்றனர்.