5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொலைத் தொடா்பு சேவைகளை வழங்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக, தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலம் நடத்த தொலைத்தொடா்புத் துறை அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மொத்தம் 72097.85 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கான ஏலம் ஜூலை 26-இல் தொடங்குகிறது. இந்த ஏலம், 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
குறைந்த அலைவரிசை (600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 800 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ்), மிதமான அலைவரிசை (3300 மெகா ஹொ்ட்ஸ்) மற்றும் அதிக அலைவரிசை (26 ஜிகா ஹொ்ட்ஸ்) ஆகியவற்றுக்கு ஏலம் நடைபெறும்.
தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதைவிட சுமாா் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு மிதமான மற்றும் அதிக அலைவரிசை அலைக்கற்றைகளை தொலைத்தொடா்பு வழங்குனா்கள் பயன்படுத்தக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வாகனம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் இயந்திரங்கள் இடையேயான தகவல் பரிமாற்றம், இணைய உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்துறை 4.0 செயல்பாடுகளில் புதுமைகளை ஊக்குவிக்க தனியாா் இணைப்புகளை உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.4.31 லட்சம் கோடி திரட்டப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
செப்டம்பருக்குள் சேவை: மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘5ஜி அலைக்கற்றை ஏல நடைமுறைகள் புதன்கிழமை (ஜூன் 15) தொடங்கியது. ஜூலை இறுதிக்குள் அந்த நடைமுறைகளை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5ஜி சேவைக்கான உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணியில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் 5ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளாா்.