அக்னி பாதை திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு – நாடு முழுவதும் 12 ரயில்கள் தீவைத்து எரிப்பு
ஹைதராபாத்: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பிஹாரின் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது மேலும் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஜம்மு தாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், குகாதியா ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அந்த 3 ரயில்களில் இருந்த 20 பெட்டிகள் எரிந்து நாசமாயின.