கோட்டாவின் அதிகாரங்களில் ரணில் கையே வைக்கவில்லை.
“அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தில் 19 பிளஸுக்குப் பதிலாக 19 மைனஸையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்கள் இதனூடாகக் குறைக்கப்படாது.”
இவ்வாறு சுட்டிக்காட்டினார் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“21ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் கூறியிருக்கின்றார். எவ்வாறாயினும் மீள 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் 19 பிளஸைக் கொண்டு வருவதற்குப் பதிலாக 19 மைனஸையே ரணில் கொண்டு வரவுள்ளார்.
இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றார் என்று இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவரிடம் ஜனாதிபதியே கூறியிருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்போது இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திரப பிரச்சினையாக இது மாறியிருக்கின்றது. இதனால், இலங்கைக்குக் கிடைக்கவுள்ள இந்தியாவின் எதிர்கால உதவிகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கே பிரதமர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் வேளையில் அதனைதத் தடுத்து நிறுத்தி அவர்களை ரணில் பாதுகாத்தார். ராஜபக்சக்களுக்கு நெருக்கமான தினேஷ் குணவர்தனவையோ, டலஸ் அழகப்பெருமவையோ பிரதமர் பதவிக்கு ராஜபக்சக்கள் நியமிக்கவில்லை. ஏனென்றால், ராஜபக்சக்களுக்கு ரணில் மாத்திரமே எப்போதும் நம்பிக்கைக்குரியவர். இதனாலயே அவர்கள் ரணிலைப் பிரதமராக்கினர்” – என்றார்.