12-எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்யுங்கள்.. சிவசேனா கோரிக்கை – உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்
மகராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 37 எம்எல்ஏக்கள் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்துள்ளதால் முதலமைச்சர் தாக்கரே தலைமையிலான ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவிலிருந்து 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து ஏக்நாத் ஷிண்டேயுடன் அசாமில் கவுஹாத்தியில் தங்கியுள்ளனர். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ள நிலையில், 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பரசீலிக்கப்படும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை தங்கள் பேரவைத் தலைவராகக் குறிப்பிட்டு 37 சிவசேனா எம்எல்ஏ-கள், துணை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கட்சி கூட்டத்தில் பங்கேற்காத 12 எம்எல்ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வரும் நிலையில் தங்களை மிரட்ட முடியாது என ஷிண்டே பதில் அளித்துள்ளார்.
சுயேச்சைகளுடன் சேர்த்து 44 எம்எல்ஏ-க்கள் ஷின்டே வசம் இருப்பதாகக் கூறுவதால் தாக்கரே ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இதனிடையே, இன்று பகல் 1 மணிக்கு சிவசேனா கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளது.