உதயநிதிக்குப் பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது பாருங்கள் முதல்வரே – சிவி சண்முகம்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை முடிந்து அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்குழு கூட்டுவதற்கான கட்சியின் சட்டவிதிகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கினார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
அப்போது அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மற்றொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. திமுக வை அழிக்க நினைப்பவர்கள். அழிந்து போவார்கள்.” என்று பேசியது குறித்து சிவி சண்முகம் தன் கருத்தைத் தெரிவித்தார்.
“முதல்வர் மிகுந்த சந்தோசத்தில் இருக்கவேண்டாம். அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். ஒன்றிய பொறுப்பிலிருந்த இபிஎஸ் படிப்படியாக முன்னேறி இன்று தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளார். இது திமுகவில் சாத்தியமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“திமுகவில் தந்தை மகன் பெயரன் கொள்ளுப்பெயரன் என வரிசையாகப் பொறுப்புகளுக்கு வருவார்கள். காலம் விரைவில் வருகிறது. நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம். விரைவிலேயே உங்கள் மகன் உதயநிதிக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்போது உங்கள் இயக்கத்தில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.