யார் ஓதும் வேதம் இது?
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான முட்டாள்களிடமிருந்து அதிகாரத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்” – என்று கூறியிருக்கின்றார் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை.
அவர் கூறுவதும் – கோருவதும் – காலிமுகத்திடலில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் நடத்துவோரின் இலக்கும் ஒன்றுதான். இந்த விடயங்களில் இனி மேலும் பூடகமாகப் பெயர் குறிப்பிடாமல், ஒளித்து விளையாடுவதில் அர்த்தமில்லை. வெளிப்படையாகப் பேச வேண்டிய வேளை வந்து விட்டது.
வெளிப்படை என்பது வெறுமனே ஆள்களின் பெயர்களை வெளிப்படையாகச் சுட்டிப் பேசுவது மட்டுமல்ல, அதையும் தாண்டி, அதில் விடயங்கள் உள்ளன.
“நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர். மக்களாவர். மக்களுக்காகத்தான் உதவி செய்ய வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகளுக்கு அல்ல” – என்றும் பேராயர் கூறியிருக்கின்றார்.
அது முற்றிலும் உண்மை. சரி பேராயர் கூறும் ‘மக்கள்’ என்பவர்கள் யார்? அவர் யாரை மக்கள் என்று கருதி நடந்தார்? – என்ற கேள்வி எழுகின்றது.
இன்று ஒரு மதத் தலைவராக, இலங்கை மக்களுக்குப் பொருளாதார ரீதியில் பேரழிவு ஏற்படுத்தப்படுகின்றபோது இவ்வளவு சீற்றம் கொள்ளும் பேராயர், இந்தப் பேரழிவுகளுக்குக் காரணமானவர்களை வளர்த்தெடுத்தது தங்களின் மத ரீதியான – நீதியின்பாற் செயற்படாத பொறுப்பற்ற போக்குத்தான் என்பதை எண்ணிப் பார்த்தாரா என்பதே பிரதான கேள்வி.
இந்த நாடு இத்தகைய சர்வாதிகாரிகளின் – எதேச்சதிகாரிகளின் -கைகளில் சிக்குண்டமைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் தானும் ஒருவர் என்பதை மறந்து அவர் இப்போது தத்துவம் பேசுகின்றமைதான் விநோதத்திலும் விநோதம்.
தமிழர் தேசத்தின் மீது, தமிழ் மக்கள் மீது வரலாற்றுப் பேரழிவு நிகழ்த்தப்பட்டபோது – மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் விதத்தில் இழைக்கப்பட்ட போது – போர்க்குற்றங்கள் மிக மோசமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது – மனித உரிமைகள் மீறப்பட்டபோது – ஏன் இப்போதைய நெருக்கடிகளிலும் விட மிக மிகக் கொடூரமான பேரழிவுக்குள் பல இலட்சம் தமிழ் மக்கள் தள்ளப்பட்டபோது அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டிய மதங்களின், மதத் தலைவர்களின் உயரிய தார்மீகக் கடப்பாட்டில் இருந்து தவறிய பெரும் குற்றவாளிகளில் இந்தப் பேராயரும் ஒருவர்.
மனித மாண்புகளுக்கு மாறான அந்தக் குரூரக் குற்றங்களை கொடூரமாக இழைத்த அந்தத் தரப்புக்கு அதைச் செய்வதற்கு ஆசீர்வாதமும் அங்கீகாரமும் வழங்கி அனுப்பிய மதத் தலைமைத்துவக் குற்றவாளிகளில் தானும் முக்கியமானவர் என்பதை அவர் மறந்து விட்டு இப்போது நியாயம் பிளக்கின்றார்.
அவர் போன்றோரின் அத்தகைய நடவடிக்கைகள்தான் இன்றைய இத்தகைய ஆட்சியாளர்களை உருவாக்கி, அதிகாரத்துக்குக் கொண்டு வந்தன என்பதை அடியோடு மறந்து இப்போது அவர் பேசுவது வேறு யாரோ வேதம் ஓதுவது போல் இருக்கின்றது.
இன்னும் கூட காலம் கடந்து சென்று விடவில்லை. இயேசுவின் உயரிய போதனைகளின் வழி நடக்காமல், அன்று தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களைப் பார்த்திருந்த பெரும் குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பதற்கு அவருக்கு இன்னமும் காலம் இருக்கின்றது. ஆனால், அத்தகைய தாராளமான – உயரிய – விசாலமான மனம் அவரிடம் இருக்கின்றதா என்பதுதான் முதல் கேள்வி. மற்றவரைக் குற்றம் சுமத்த முதல் தன்னில் ஊறிக் கிடக்கும் பெருங்குற்றத்தை அவர் பார்த்துக்கொள்வதே நல்லது.
– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (26.06.2022)