கணவரின் கோடரித் தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

 

ஒன்றரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி (வயது 24) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொரியவருவதாவது,

உயிரிழந்த இளம் தாயின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன் பகுதி நேர வருமானத்துக்கு நுவரெலியா நகரில் தனக்குச் சொந்தமான ஓட்டோவை ஓட்டி வருகின்றார்.

சம்பவ தினமான நேற்றிரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய அவருக்கும் மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

வாய்த்தர்க்கமாக ஆரம்பமான இந்தத் தகராறு பின் தாக்குதலில் முடிவடைய கணவர், மனைவி மீது ஆத்திரம் கொண்டு வீட்டில் இருந்த கோடரியால் அவரின் தலையில் மீது தாக்கினார். சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார்.

இதையடுத்து தன்னுடைய இளைய மகளைத் தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கணவர் சரணடைந்தார்.

மனைவியின் தொலைபேசி உரையாடலில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகமே இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிவான் சென்று மரண விசாரணை நடத்தினார்.

நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.