சந்திரிகா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக திரைமறைவில் அரசியல் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
எனினும், இந்தக் கூட்டணியில் சந்திரிகா உத்தியோகபூர்வமான தலைமைப் பொறுப்பை வகிக்க மாட்டார் எனவும், தலைமைத்துவச் சபை கூட்டணியை வழிநடத்தும் எனவும் தெரியவருகின்றது.
இந்தக் கூட்டணியில் இணையுமாறு முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவுக்கும் கூட்டணியில் உயர் பதவி வழங்கப்படும் எனப் பேசப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
ராஜபக்சவினர் நாட்டைக் கொள்ளையிட்டு நாட்டை அழித்துள்ளனர் எனவும், மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டார் எனவும் சந்திரிகா குற்றம் சுமத்தி வருகின்றார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமையை விரட்ட வேண்டும் எனவும் அவர் கூறி வருகின்றார்.