உழவு இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கைப்பற்றல்.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25 சிறிய கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் சிறிய டீசல் கொள்கலன்களே இவ்வாறு பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
30 L கொள்ளளவு உடைய 27 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டு அக்கரைப்பற்று பிரதேசம் நோக்கி உழவு இயந்திரம் ஒன்று செல்வதாக பொதுமக்கள் அறிந்து கொண்டதுடன் பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகே ஒன்று கூடிய மக்கள் உழவு இயந்திரத்தை தடுத்து நிறுத்தி பொலிஸாருக்கு தகவலை வழங்கினர்.
இந்நிலையில், அங்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றி அதில் உள்ள கலன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு உழவு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், பொலிஸ் நிலையம் வருகை தந்த சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவை தங்களது அமைப்புக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் பொலிஸாரிடம் கையளித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.