இந்தியாவில் 45% உயர்வு கண்ட கொரோனா – ஒரே நாளில் 17,073 பேருக்கு தொற்று
இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,073 ஆக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,07,046ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 94,420ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15,208 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 21 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,020ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் தினசரி டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்றும் 5.62 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,03,604 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.
மகாராஷ்டிராவில் புதிதாக 6,493 பேருக்கும், கேரளாவில் புதிதாக 3,378 பேருக்கும், டெல்லியில் புதிதாக 1,891 பேருக்கும், தமிழ்நாட்டில் புதிதாக 1,472 பேருக்கும் கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது.
நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 2,49,646 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை ஒட்டுமொத்தமாக 197.11 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன.