ராஜீவ் காந்தி கொலையில் சிறையிலிருப்பவர்களைச் சந்தித்து பேசிய அற்புதம்மாள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவந்தனர். அதில், கடந்த மாதத்தில் பேரறிவாளன் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள ஆறு பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்தநிலையில், பேரறிவாளனின் தாயாரும் அவருடைய விடுதலைக்கு நீண்ட காலம் போராட்டம் நடத்தியவருமான அற்புதம்மாள் சென்னை புழல் சிறைக்குச் சென்று ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசினார். குறிப்பாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் ராபரட் பயஸ் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘ராபர்ட் பயாஸின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் உடனே பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கிலிருந்து மற்றவர்கள் விடுதலையாகததால் பேரறிவாளன் மன வருத்தத்துடன் உள்ளார். பேரறிவாளனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பால் அனைவருக்கும் விரைவில் நன்மை நடக்கும். முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். 31 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.