நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்தவர் தலை துண்டித்து படுகொலை.. வீடியோ வெளியிட்டு மிரட்டல்
ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. அதைத் தொடர்ந்து நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இந்தியா அனைத்து மதங்களுக்கு உயரிய மதிப்பை அளித்து வருவதாகவும் அது தனிப்பட்ட சிலரின் கருத்து என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் இந்தியாவில் சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன, இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவிட்ட 40 வயது தையற்கலைஞர் கன்னையா லாலின் கடைக்கு வந்த இருவர் அவரின் தலையை துண்டித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அதில் ஒருவர் வெட்ட மற்றொருவர் அதை மொபைலில் வீடியோ பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளும் அந்த இருவரும் அப்போது பயன்படுத்திய கத்தியையும் பதிவிட்டதுடன் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதும் உதய்பூரில் கடைகள் மூடப்பட்டன. அங்கிருந்த கடைக்காரர்களும், பாஜக-வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனங்கள் தீக்கிரையாகின.
அதைத் தொடர்ந்து உதம்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையும் முடக்கப்பட்டு மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உதய்பூரின் அண்டை மாவட்டமான ராஜ்சமந்தில் வைத்து ரியாஸ் அக்தர் மற்றும் முகம்மது கோஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னையா லாலுக்கு சமூக வலைதள பதிவு காரணமாக மிரட்டல் வந்ததாகவும் ஒரு வாரம் கடைக்கு வராமல் இருந்தவர் திங்கள்கிழமைதான் வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இச்சம்பவம் நினைத்துக் கூட பார்க்க முடியாத செயல் என்றும் மிகவும் கண்டிக்கத்தது என்றும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி மதத்தின் பெயரால் இது போன்ற கொடூரங்களை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, ராஜஸ்தான் அரசு ஒரு தரப்பினரை சமாதானப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரத்துக்கு இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறை கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உதய்ப்பூர் மாவட்டத்துக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விரைந்துள்ளனர். பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் கூடுதலாக காவல் துறையினரை பணியில் அமர்த்தி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.