கேரளாவில் ஆந்தராக்ஸ் நோய் பரவல் அபாயம் – உஷார் நிலையில் சுகாதாரத்துறை
கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக்கும். இந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், இந்த நீர் வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் செத்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையின் முடிவில் பன்றிகளுக்கு ஆந்தராக்ஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விலங்களை மீட்டு பரிசோதனை மேற்கொண்ட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆந்தராக்ஸ் பாதிப்பானது விலங்குகள் இடையே தீவிரமாகப் பரவும் என்பதால் பாதிப்பானது மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், கேரளாவில் ஆந்தராக்ஸ் நோய் பரவியுள்ளது. அதேவேளை இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது காற்று மூலமாகப் பரவக் கூடியது அல்ல. மற்ற விலங்குகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
பெசில்லஸ் ஆந்திராசிஸ் என்ற பேக்டீரியா விலங்குகளை பாதிப்பதன் மூலம் இந்த ஆந்தராக்ஸ் நோய் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்வதன் மூலமாகவே, அந்த விலங்குகள் மற்றும் அதன் பொருள்களை உண்பது மூலமாகவோ இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது.