நாட்டை அழித்த அரசை உடன் விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்.

“இன்று நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது. இந்தக் கொடுங்கோல் அரசை உடனடியாகத் தூக்கியெறிந்து, மக்கள் சார் அரசை ஸ்தாபிக்க வேண்டியது இன்றியமையாதது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த வண்ணம் மேற்கொள்ளப்படும் அழிவை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் நாட்டுக்குக் கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைந்து ஆரம்பிக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘கோட்டா – ரணிலின் சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நேற்று கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு முழு நாட்டு மக்களையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிட்டது.

புதிய மக்கள் ஆணையின் மூலம் தூய்மையான ஆட்சியொன்றைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.