வீட்டிற்கு வந்த திருடனுக்கு 35 தையல்கள் – அதிர்ச்சி வைத்தியம் அளித்து பாராட்டுக்களை அள்ளிய வளர்ப்பு நாய்
கொல்கத்தாவில் வளர்ப்பு நாய் ஒன்று தனது உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடனை பிடிக்க உதவி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாது பாட்டச்சாரியா சாலை என்ற இடம் உள்ளது. இங்கே தான் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வசித்து வருகிறார். இங்கு பிரசென்ஜித் சக்ரபூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில், இவரது வீட்டில் அதிகாலை நான்கு மணி அளவில் திருடன் ஒருவன் புகுந்துள்ளார்.
அந்த திருடன் வீட்டில் உள்ள பொருள்களை திருடி வந்த நிலையில், வீட்டில் வசிக்கும் பெண் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். வீட்டுக்குள் திருடன் புகுந்ததை அறிந்ததும், அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே உஷாரான திருடன் கத்தியை நீட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார். இதற்குள் பிரசன்ஜித் விழித்துக்கொண்டு, அங்கே வந்து திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன் பிரசன்ஜித்தை கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த நேரத்தில் தான் வீட்டின் வளர்ப்பு நாயான ராக்கி எதிர்பாராத என்ட்ரி தந்துள்ளது. திருடனின் காலை கவ்வி கடித்த அந்த நாய், வீட்டின் நபர்கள் சுதாரித்து தாக்கும் வரை விடாமல் திருடனை பிடித்து வைத்துள்ளது. நாயின் பிடியில் சிக்கிக் கொண்ட திருடனை வீட்டில் இருந்த ஐந்து பேரும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருடனை கைது செய்த காவல்துறை அவனை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருடனை நாய் கடித்ததில் அவனது கழுத்து, தோள், கால் ஆகியவற்றில் 35 தையல்கள் போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருடனை விசாரித்ததில் அவர் அதே பகுதியில் காய் விற்பனை செய்பவர் என்றும், திருடு போக இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்தான் சதி திட்டம் தீட்டி இந்த திருடனை அங்கு அனுப்பியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பக்கத்து வீட்டுக்காரரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் கதாநாயகனான ராக்கி நாயை காவல்துறையினரும், அக்கம்பக்கத்தினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.