வேறு வழியில்லை.. போதைக்கு அடிமையான மகனை சங்கிலி போட்டு கட்டிய பெற்றோர்
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞரை அவரது குடும்பத்தினர் கட்டிலில் சங்கிலியால் கட்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தில் மற்றும் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் வசிக்கும் 23 வயது நபர் ஒருவர் தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இவரை திருத்த குடும்பத்தினர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எனவே, வேறு வழி இன்றி அவரை குடும்பத்தினர்களே கட்டிலில் கட்டி வைத்துள்ளனர். இந்த இளைஞர் கூலி வேலை செய்து வரும் நிலையில், நாள்தோறும் ரூ.800 செலவு செய்து இவர் போதைப் பொருள்களை பயன்படுத்தி வருவதாக அந்த நபரின் தாயார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக போதைக்கு அடிமையான இவர் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் அதற்கே செலவு செய்வது மட்டுமல்லாது, வீட்டில் இருக்கும் பொருள்களையும் திருடி விற்று போதை மருந்துகளை வாங்கியுள்ளார். மேலும், யாரேனும் தடுத்தால் அவர்களையும் அடித்து தாக்கியுள்ளார் இந்த நபர் .
வேறு வழியே இல்லாமல், கடந்த எட்டு நாள்களாக இந்த இளைஞரை கட்டிலில் இரும்பு சங்கிலி போட்டி குடும்பத்தினர் கட்டி வைத்துள்ளனர். தேவையான நேரத்திற்கு உணவு, நீர் போன்ற பொருள்களை தந்து பார்த்துக்கொள்கின்றனர்.
மேலும், தனது கிராமத்தில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது எனவும் அரசு இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட நபரின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமாற்றம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் பொது மக்கள் தொடர் புகார் அளித்து வருகின்றனர்.