அகதிகளும், மேற்குலகின் இரட்டை முகங்களும் : சண் தவராஜா
சொந்த மண்ணில் இருந்து துரத்தப்படுவது போன்ற அவலம் வேறொன்றுமில்லை.
உலகின் பல பாகங்களிலும் அநேக மக்கள் இத்தகைய அவலத்தை பல்வேறு காரணங்களுக்காக அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.
அரசாங்க அடக்குமுறை,
வன்முறைகளிலிருந்து தப்புதல்,
பாதுகாப்பைத் தேடி,
வளமான எதிர்காலத்தை நோக்கி
எனப் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்கள் சொந்த வாழ்விடத்தைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள்.
இத்தகைய இடப் பெயர்வு சில வேளைகளில் நாடுகளின் எல்லைகளையும் கடந்ததாக அமைந்து விடுகின்றது.
வரலாற்றுக் காலம் முதலாக நிகழ்ந்த இத்தகைய இடப் பெயர்வுகள் பல இனங்களின், மக்கட் கூட்டங்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்திருந்தன. சில வேளைகளில், புதிய நாகரிகங்களின் தோற்றுவாயாகவும் அவை விளங்கியிருக்கின்றன.
தற்கால உலகில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக விளங்குவது அகதி வாழ்க்கை.
சொந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழலில், நாட்டைவிட்டு வெளியேறுவோர் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பை மட்டுமன்றி வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கின்றனர்.
ஆனால், இத்தகைய வாய்ப்பு அகதிகளாக அலையும் அனைவருக்கும் கிட்டுவதில்லை. பலர் தாம் தேடிச் செல்லும் இடங்களைச் சென்றடைவதற்கு முன்னமேயே மரணத்தைத் தழுவி விடுகின்றனர். அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் பயணம் அத்தகையது. தமது பயணத்தின்போது அவர்கள் பல்வேறுபட்ட சவால்களைச் சந்திக்க நேருகிறது. இயற்கைச் சவால்கள் மாத்திரமன்றி, தாம் இடைநடுவில் படையினரின் கைகளில் அகப்படாமல் இருப்பதற்காக அபாயகரமான பயணங்களையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.
1980கள் தொடக்கம் பல தடவைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனுபவமும், வெளிநாடு நோக்கிப் புலம் பெயர்ந்த அனுபவமும் ஈழத் தமிழர்களில் அநேகருக்கு நிச்சயமாக இருக்கும். இதன்போது அவர்களும் பல அபாயகரமான அனுபவங்களைப் பெற்றிருப்பர். அந்தப் பயணங்களின் போது தமது உறவுகளையும், நண்பர்களையும் இழந்திருப்பர்.
இத்தகைய பயணங்களும், இழப்புக்களும் தொடர்ந்தும் தொடர்கதையாகவே நீண்டு செல்கின்றது. தாயகத்தில் ஆயுதப் போரட்டம் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஈழத் தமிழர்களின் இந்தப் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அதேவேளை, அகதிகளின் துயரங்கள் தொடர்பாகவும், அவர்களின் மரணங்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாகின்ற ஒவ்வொரு தருணத்திலும் எமது மனங்கள் கடந்தகால நினைவுகளை மீட்டல் செய்கின்றன. துக்கம் தொண்டையை அடைக்கின்றது.
கடந்த வாரத்தில் (27.06) அமெரிக்க மண்ணில் இருந்து அத்தகைய துயரச் செய்தியொன்று வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 51 அகதிகள் பலியாகி உள்ளனர்.
தெற்கு ரெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சன் அன்ரோனியோ என்ற நகருக்கு அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மூடப்பட்ட பாரவூர்தி ஒன்றில் அடைக்கப்பட்டுக் கடத்திவரப்பட்ட தென்னமெரிக்க அகதிகளே அதீத வெப்பம் காரணமாக மரணத்தைத் தழுவி உள்ளனர்.
நான்கு சிறுவர்கள் உட்படப் பலர் உயிர் தப்பியுள்ள இந்தச் சம்பவத்தில் 39 ஆண்களும் 12 பெண்களும் இறந்துள்ளனர். இறந்தவர்களில் அநேகர் மெக்சிகோ நாட்டவர்கள் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தகைய மரணங்கள் அமெரிக்காவில் புதியவை அல்ல. தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான அகதிகள் அமெரிக்க மண்ணில் கால்பதிக்கின்றார்கள். அவர்களுள் பலர் தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தைச் சென்றடைகின்றனர். ஒரு சாரார் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்க, சொற்ப தொகையினர் நடுவழியிலேயே பரிதாப மரணத்தைத் தழுவிக் கொள்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் 2021 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இத்தகைய மரணத்தைத் தழுவியோரின் எண்ணிக்கை 557. முன்னைய வருடத்தை விடவும் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என்கின்றன புள்ளி விபரங்கள்.
அமெரிக்க மண்ணில் நிகழ்வதால் இத்தகைய மரணங்கள் உலகின் கண்களில் படுகின்றன. விவாதப் பொருளாக மாற்றம் பெறுகின்றன. வழக்கம் போன்று ஆட்களைக் கடத்துபவர்கள் தொடர்பாகவே ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டாலும், ஒரு சிறு அளவிலாவது அகதிகளின் அபாயகரமான பயணம் தொடர்பாகவேனும் உரையாடல்கள் நிகழ்கின்றன.
அதேவேளை, உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெறத் தவறிவிடுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை (28.06) லிபியாவின் சகாராப் பாலைவனத்தில் 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 2 லிபியர்களும், அயல்நாடான சாட்டின் குடிமக்கள் 18 பே ரும் வழி தவறிய நிலையில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாத நிலையில் இறந்திருந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இறந்திருந்த இவர்களின் சடலங்கள் சாட் எல்லையில் இருந்து 120 கிலோ மீற்றர் தொலைவிலும், அயலில் உள்ள லிபியாவின் நகரான குப்ராவில் இருந்து 320 கிலோ மீற்றர் தொலைவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
லிபியாவின் நீண்டகால ஆட்சியாளரான கேணல் கடாபியின் ஆட்சி மேற்குலகின் தலையீடு காரணமாக 2011இல் அகற்றப்பட்டு அங்கே முறையான அரசாங்கம் இன்றுவரை நடைமுறைக்கு வராத சூழலில், ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்தும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் ஐரோப்பா நோக்கிச் செல்லும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் வழித்தடமாக லிபியாவே இருந்து வருகின்றது.
சகாராப் பாலைவனத்தின் ஊடாகப் பயணித்து, லிபியக் கரைகளில் இருந்து படகுகள் மூலம் புறப்படும் அகதிகள் மத்தியதரைக் கடலில் அபாயகரமான கடற்பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவைச் சென்றடைகின்றனர். அவ்வாறு புறப்படும் அனைவருமே ஐரோப்பாவைச் சென்றடைவதில்லை. அவர்களில் பலர் கடலிலேயே மரணத்தைத் தழுவி விடுகின்றனர். கடந்த வருடம் அவ்வாறு கடலிலேயே மரணத்தைத் தழுவியோரின் எண்ணிக்கை 1500க்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
அதேவேளை, உலகின் கவனத்தை ஈர்க்காத மற்றுமொரு சம்பவம் மொரோக்கோ-ஸ்பானிய எல்லையோரம் நடைபெற்றுள்ளது. யூன் 25ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 37 அகதிகள் சாவைத் தழுவிக் கொண்டதுடன், 150 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆபிரிக்கா, ஐரோப்பா எனக் கண்டங்கள் வேறாகப் பிரிக்கப்பட்டு உலகப் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ளன என்பது பலரும் அறியாத விடயம். அத்தகைய ஒரு எல்லையை ஆபிரிக்கக் கண்டத்து நாடான மொரோக்கோவும், ஐரோப்பியக் கண்டத்து நாடான ஸ்பானியாவும் கொண்டுள்ளன.
மெலில்லா எனப்படும் இந்த இடத்தில் அகதிகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 6 முதல் 10 மீற்றர் வரை உயரமான பாதுகாப்பு வேலி போடப்பட்டு உள்ளது. ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காகக் காத்திருக்கும் ஆபிரிக்க நாட்டு அகதிகள் இந்த வேலியைத் தாண்டிக் குதித்து ஸ்பானிய மண்ணில் கால்பதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. இத்தகைய வேளைகளில் இரண்டு நாட்டுப் படையினரும் அதீத பலப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்வதும், சில வேளைகளில் கொலை செய்வதும் தொடர்கதையாக உள்ளது.
யூன் 25ஆம் திகதியும் இதுபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் சாட், நைஜர், சூடான் மற்றும் தென் சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 500 வரையான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் இந்தப் பாதுகாப்பு வேலியைத் தாண்டி ஸ்பெயின் பகுதிக்குள் பிரவேசித்து உள்ளனர். அவர்கள் மீது இரண்டு நாட்டினதும் படையினர் மேற்கொண்ட தாக்குதலிலேயே 150 பேர் வரை காயங்களுக்கு இலக்காகி உள்ளனர். 37 பேர் மரணத்தைத் தழுவி உள்ளனர். தங்களுக்குள் ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டுள்ள இரண்டு நாடுகளினதும் படையினர் ஒருவர் பிரதேசத்துக்குள் மற்றவர் சென்று தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தோரும், மனித உரிமைகள் அமைப்பினரும் தெரிவித்து உள்ளனர். கற்கள் மற்றும் பொல்லுகள் என்பவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி பலர் இறந்திருக்க, உயரமான தடுப்பு வேலியில் ஏறி வீழ்ந்த நிலையிலும் சிலர் இறந்திருந்தனர். இந்தச் சம்பவத்தின் போது காயங்களுக்கு இலக்கானோர் பல மணித்தியாலங்களாக மருத்துவ உதவி இன்றித் தவிக்க விடப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் அன்றாடம் உலகின் பல பாகங்களிலும் இடம்பெறவே செய்கின்றன. வெள்ளைத் தோலும், நீலக் கண்களும் கொண்டவர்கள் அகதிகளாக மாறும் போது அவர்கள் தொடர்பில் காட்டப்படும் கரிசனை ஆசிய நாட்டவர்கள் மீதும், ஆபிரிக்க நாட்டவர்கள் மீதும் காட்டப்படுவது இல்லை என்பது கசப்பான உண்மை.
இதுவே மேற்குலகின் நியதியாக உள்ளது என்பதற்கு அண்மைய எடுத்துக் காட்டு உக்ரைன் அகதிகள் விவகாரம். உக்ரைன் அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்கும் மேற்குலகம் மற்றைய நாடுகளில் இருந்து வரும் அகதிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகின்றது என்பது இரகசியமான விடயம் அல்ல. யதார்த்தம் அவ்வாறு இருக்கையில், மனித உரிமைகள் தொடர்பில் அத்தகைய நாடுகள் விரிவுரை நடத்துவதுதான் சகிக்க முடியாத கொடுமையாக உள்ளது.