இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் Edgbaston மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பாரிஸ்டோ 106 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 284 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின் 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துங்கிய இந்திய அணிக்கு புஜாரா (66), ரிஷப் பண்ட் (57) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தாலும், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்ற மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எட்டக்கூடிய எளிய இலக்கை துரத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லே (46) மற்றும் அலெக்ஸ் லீஸ் (56) ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இதன்பின் வந்த ஓலி போப் டக் அவுட்டானாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த பாரிஸ்டோ – ரூட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன் சேர்த்தது.
இந்திய பந்துவீச்சாளர்களின் அனைத்து வியூகங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், இலக்கை மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஜோ ரூட் 142 ரன்களுடனும், ஜானி பாரிஸ்டோ 114 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் சமன் செய்துள்ளது.