சிறுவர், பெண்கள் அமைச்சு இல்லாத அரசாங்கம் குறித்து கவலை
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எந்தவொரு அமைச்சும் ஒதுக்கப்படாமை குறித்து சட்டத்தரணிகள் சங்கமொன்று தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்திற்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நான்கு பதிவாகுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பில் சிறுவர்கள் மிக முக்கிய பங்கை வகிப்பதாக மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சை நீக்கியுள்ள அரசாங்கம், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு இராஜாங்க அமைச்சராக ஆண் ஒருவர் நியமித்துள்ளது.
”நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பதில் பிரதான இடம் வகிப்பது இந்த நாட்டின் சிறுவர்கள்.சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.பிரதானமான விடயமே சிறுவர்கள்.நடைமுறை அமைச்சரவை நியமனத்தின் போது சிறுவர்கள் தொடர்பில், பெண்கள் தொடர்பில், கவனம் செலுத்தப்படவில்லை. பாரிய அளவில் பாலியல் சுரண்டல்கள், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருக்கும் நாட்டில், இந்த விடயங்களை கையாளுவதற்கு தனியான அமைச்சு உருவாக்கப்படவில்லை.”
மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, அந்த அமைப்பினால் கடந்த ஒகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதன்முதலில் நடத்திய ஊடக சந்திப்பில் சிறுவர், பெண்களுக்கான அமைச்சு உருவாக்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நாளொன்றில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்திற்கும் ஒரு தடவை சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதுடன், குறைந்தது நான்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம்பெறுவதாக குற்றங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப்பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு 5, 292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி வெளியிட்ட தகவலின் பிரகாரம் 1642 பாலியல் பலாத்கார சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதுடன், ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் 48, 361 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றில் 413 சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை செய்யப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளதுடன், அவற்றில் 185 சம்பவங்கள் தொடர்பிலேயே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
”கடந்த ஏழு வருடங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குற்றங்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும் அவை இடம்பெறுவதை தடுப்பதற்கு மாவட்ட பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவு மாவட்ட உளவியல் அதிகாரிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட நிர்வாகத் தரப்பினரால் உரிய முறையில் பணிப்புரைகள் வழங்கப்படவில்லை என அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியிருந்தார்”
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கு மக்கள் சட்டத்தரணிகள் அமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு அனைத்து சட்டத்தரணிகளுக்கும் அச்சலா செனவிரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.
”இது எங்களின் கவனத்திற்கு வந்தது. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு அது தொடர்பில் குரல் கொடுப்பதல், ஒன்றல்ல பல்வேறு வழிகள் ஊடாக மனித உரிமை மீறப்படுகின்றமை, சிறைக்கைதிகளை தவறாக நடத்துகின்றமை, அதேபோன்று சமூகத்தில் உள்ள மேலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் மக்கள் சட்டத்தரணிகள் என்ற இந்த அமைப்பு மிகவும் பலமாக எதிர்காலத்தில் இது தொடர்பில் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் என நாம் கூறுகின்றோம்.”
19 தொடர்பில் அவதானமாக இருங்கள்
விரைவில் ஏற்படுத்தவிருக்கும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது என இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட அச்சலா செனவிரத்ன, இது குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, அந்த ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்படுமாயின் நாட்டு மக்கள் எதிர்நோக்கக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டு சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி சேனக்க பெரேரா, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ மற்றும் சட்டத்தரணி உப்பாலி ரத்நாயக்க ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.