தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் திமுகதான் காவல் அரண் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் காவல் அரண் என்றால் அது திமுக தான் என, முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை – வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையிலேயே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாலையில், அருணை நகரில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் மற்றும் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது, அவருக்கு வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். பரதநாட்டியம், மேளதாளங்கள் மற்றும் தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
முதலமைச்சரை வரவேற்பதற்காக சாலையோரம் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்ததை கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அவர்களுடன் உரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்பு திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தினர் உடன், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதைதொடர்ந்து, அருணை நகரில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவுவாயில் மற்றும் கருணாநிதி சிலையை, இசை வாத்தியங்கள் முழங்க முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் காவல் அரண் என்றால் அது திமுக தான் என குறிப்பிட்டார். முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ. வேலு, பொன்முடி மற்றும் மஸ்தான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.