கர்நாடக மாநிலத்தில் கனமழை : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் உடுப்பி, வடக்கு கன்னடா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உடுப்பி, வடக்கு கன்னடா மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. வடக்கு கன்னடா மாவட்டத்தில் உள்ள பத்கல் நகரில் 21 செ.மீட்டர் மழையும், கர்வாரில் 20 செ.மீட்டர் மழையும் பதிவானது. சுபர்னிகா, குப்ஜா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியதால் தாழ்வான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. உடுப்பி மாவட்டத்தில் பிரமவார், நீலவாரா, பைந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான வீடுகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிராமப் பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், கே.ஆர். எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன. 124 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் தற்போது நீர் மட்டம் 121. 42 அடியை எட்டியுள்ளது. இதனால், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 25 ,000கனஅடி வரை நீர் வெளியேற்றப்படலாம் என்பதால் காவேரி நதியோர பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.