தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 722 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று 2 ஆயிரத்து 671 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 18 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரேநாளில் இரண்டாயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் இன்று 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயனடையும் வகையில், ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிலையான முகாமும், 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம், 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் தடுப்பூசி முகாம் நடத்த அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.முதல் தவணை தடுப்பூசி போடாமல் அதிகம் பேர் உள்ள மாவட்டங்களில் ராணிப்பேட்டை முதல் இடத்திலும், கன்னியாகுமரி 2-வது இடத்திலும், தேனி மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.