யார் இந்த மஹிந்த யாப்பா?
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னர், புதிய நியமனங்கள் இடம்பெறும் வரை சபாநாயகரே இடைக்கால ஜனாதிபதியாகச் செயற்படுவார். அந்தவகையில் கோட்டா – ரணில் இராஜிநாமா செய்த பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்பார்.
அதன்பின்னர் இடைக்கால சர்வகட்சியை உடன் அமைத்து 30 நாட்களுக்கிடையில் நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள மஹிந்த யாப்பா அபேவர்தன, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்று, முகாமைத்துவம் தொடர்பில் இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளார்.
அவரின் அரசியல் வரலாற்றைப் பின்வருமாறு மீட்டுப் பார்க்க முடியும்.
* 1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் – ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
* 1987 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியில் முன்வைக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை (13ஆவது திருத்தச் சட்டம்) கடுமையாக எதிர்த்தார். அதற்கு எதிராக வாக்களித்தார். இதனால் கட்சிக்குள் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. எம்.பி. பதவியையும் இழக்க நேரிட்டது.
* ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து காமினி திஸாநாயக்க , லலித் அத்துலத்முதலி உள்ளிட்டவர்கள் வெளியேறி, உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் பிற்காலத்தில் இணைந்துகொண்டார்.
* 1993 இல் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் முதலமைச்சர் பதவியையும் வகித்தார். 2001 ஆம் ஆண்டுவரை மாகாண அரசியல் பயணம் நீடித்தது.
* 2001 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றதுக்குத் தெரிவானார்.
* 2004 இல் சந்திரிகா ஆட்சியில் பிரதி அமைச்சரானார். அதன்பின்னர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவிகளையும் வகித்தார்.
* 2010 இல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, மஹிந்த ஆட்சியில் விவசாய அமைச்சராகச் செயற்பட்டார்.
* 2015 இல் பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்றார். எதிரணியில் செயற்பட்டார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தார்.
* 2020 இல் பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் தெரிவான அவர், சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இன்றளவிலும் அப்பதவியில் நீடிக்கின்றார்.