விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/07/Vijay-Mallaya-16575196213x2-1.jpg)
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவில் கடன் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. 2016ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டன் நாட்டில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார். இவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் இன்டர்போல் உதவியுடன் இந்திய புலமாய்வு, அமலாக்க அமைப்புகள் மற்றும் வெளியுறவுத்துறை தொடர் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், மல்லையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழக்கு தொடர்ந்த நிலையில், கடனை திருப்பி தராமல் விஜய் மல்லையா பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என 2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி அவரின் குழந்தைகளுக்கு ரூ.317 கோடி பண பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா நீதிமன்ற உத்தரவை மீறினார் என கூறி அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய்மல்லையா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் விஜய்மல்லையா நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தபட்டது. இருப்பினும் அவர் ஆஜராகாத நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி இவ்வழக்கில் தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விவரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி U.U.லலித் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ளது. அதன்படி, நீதிமன்ற அவமதிப்பிற்காக 4 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவு. மேலும்,கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8% வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் விஜய் மல்லையா மற்றும் அவரது மகன் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் சொத்துக்கள் முடக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை ரூ.18,000 மீட்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.