சிகிச்சைக்கு உதவி கேட்ட இளைஞர்.. கையிலிருந்த தங்க வளையலை கழற்றி தந்த அமைச்சர்!
கேராளவில் சிறுநீரக நோய்க்கு ஆளான நபரின் மருத்துவ சிகிச்சைக்கு அம்மாநில அமைச்சர் ஆர் பிந்து தனது தங்க வளையலை கழட்டி தந்து உதவி செய்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளவர் ஆர் பிந்து. இவர் அம்மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலக்குடா என்ற பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். விழாவில் பேசிய அவர், மாநிலத்தின் கல்வித்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கல்வியில் புதிய முதலீடுகளை செய்யவும் புதிய பாடத்திட்டங்களை கொண்டு வரவும் அரசு செயலாற்றி வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஏழு பேர் கொண்ட குழுவின் பரிந்துரையை பின்பற்றி மாநிலத்தின் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை அரசு ஏற்படுத்தவுள்ளது. இந்த குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அரசுக்கு முழு அறிக்கை கிடைத்தவுடன் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, 27 வயது மதிக்கத்தக்க விவேக் பிரபாகர் என்பவர் தனக்கு சிறுநீரக பாதிப்பு நோய் உள்ளது எனவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமைச்சர் உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். அவரின் கோரிக்கைக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என நினைத்த அமைச்சர் பிந்து, தனது கையில் போட்டிருந்த தங்க வளையலைக் கழற்றி கொடுத்து சிகிச்சைக்காக வைத்துக்கொள்ளுங்கள் என்றுள்ளார். மேலும், நல்ல முறையில் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார். உதவி கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் தனது தங்க வளையலை கழற்றி தந்த அமைச்சரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.