மகன் வளர்த்த நாயே தாய்க்கு எமன் ஆனது: 82 வயது மூதாட்டி கடிபட்டு பலியான கொடூரம்- லக்னோவில் பயங்கரம்

லக்னோவின் கைசர்பாக் பகுதியில் 82 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் அவரது மகன் வளர்த்த பிட்புல் நாயால் கடிபட்டு பலியானார்.

பலியான 82 வயது தாயாரும் ஆசிரியையும் ஆன சுசீலா திரிபாதியின் மகன் அமித் ஒரு உடற் பயிற்சியாளர். அமித், இரண்டு செல்ல நாய்களை வைத்திருந்தார் – ஒரு பிட்புல் மற்றும் ஒரு லாப்ரடோர். இதில் பிரவுனி என்று அழைக்கப்பட்ட பிட்புல் ரக நாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகும். கைசர்பாக்கின் பெங்காலி தோலா பகுதியில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது.

அமித்தின் தாயார் சுசீலா திரிபாதி இன்று காலை 6 மணிக்கு வீட்டில் தனியாக இருந்துள்ளார், மகன் வழக்கம் போல் உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று விட்டார். அப்போது பிட்புல் நாய் தாயார் மீது பாய்ந்து அவரை கடித்துக் குதறியது, அவர் கத்திக் கதறி உதவிக்கு அழைத்துள்ளார், ஆனால் யாரும் வருவதற்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் அந்தத் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டுக்கு வந்த மகன் அமித், தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனேயே பல்ராம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அதிக ரத்தம் போனதால் தாயார் ஏற்கெனவே இறந்திருந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய்க்கடித்துள்ளது இறப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்டை வீட்டுக்காரர்கள் இது தொடர்பாகக் கூறும்போது, “6 மணியிருக்கும் நாய்கள் பயங்கரமாக குரைத்தன, சுசீலா உதவி கோரி கத்தினார். நாய்கள் அவரைக் கடித்ததாகவே தெரிந்தது. வீட்டுக்கு நாங்கள் போனோம், ஆனால் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. பிறகு மகன் வந்த பிறகுதான் கதவு திறந்த போடு சுசீலா ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

நாய்கள் வளர்ப்புக்கு பிரத்யேக உரிமம் உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிமுறைகள் இருக்கின்றன. நாயை வளர்ப்பவர்கள் அதைக் கட்டிப்போட்டுத்தான் வைத்திருக்க வேண்டும், குறிப்பாக அண்டை வீட்டாரின் புகார் எதுவும் வரக்கூடாது. ஆனால் அண்டை வீட்டை விட்டுத்தள்ளுவோம் சொந்த வீட்டிலேயே தன் எஜமானின் தாயாரையே கடித்துக் குதறியுள்ளது வளர்ப்பு நாய்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.