மழையில் குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு 4 கிமீ நடந்த தந்தை
அய்யப்பன் மற்றும் சரஸ்வதி என்ற இணையருக்கு மூன்று மாதத்திற்கு முன்னால் சஜேஸ்வரி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அந்த பெண் குழந்தை இறந்து போனது.
பாலக்காட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆம்புலன்சில் குழந்தையின் உடல் தடிகுண்டு என்ற ஊர் வரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான அட்டப்பாடியில் உள்ள முருகலா என்ற கிராமத்துக்கு செல்வதற்கான வழி அனைத்தும் மழைக் காரணமாக கடுமையாக பாதிப்படைந்திருந்தது.
வழியில் உள்ள பவானி ஆறு, செருநள்ளி கால்வாய் உள்ளிட்டவை மழைக் காரணமாக வெள்ளப்பெருக்காக காணப்பட்டன. இதனால் அவரது குழந்தை உடலை அய்யப்பன் கையில் தூக்கிக்கொண்டு காடு வழியாக நடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஐயப்பனுடன் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியான விகே ஸ்ரீகண்டன் உடன் வந்தார்.
மழைக் காரணமாக தன் குழந்தையின் உடலை கையில் ஏந்தி ஊர் வந்து சேரும் நிலை அய்யப்பனுக்கு ஏற்பட்டது முருகலா ஊர் மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.