இந்தியாவுக்குள் நுழைந்தது மங்கிபாக்ஸ் தொற்று – கேரளாவில் முதல் பாதிப்பு பதிவு!
இந்தியாவில் முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நபர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த 12ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்துசேர்ந்தவர் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
அவருடன் முதன்மை தொடர்பில் இருந்தவர்களான தந்தை, தாய், கார் ஓட்டுநர்கள், விமானத்தில் உடன் பயணித்த 11 பேர் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீனா ஜார்ஜ் கூறினார். இந்நிலையில், கேரள அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவினர் நேரில் ஆய்வுசெய்து, மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நோய் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர் கண்காணிப்பில் உள்ள நிலையில், மாநில அரசும் தேவையான கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதாரத்துறை வழங்கும் என ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
60க்கும் மேற்பட்ட நாடுகளில், 9,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று இதுவரை பரவியுள்ளது. 1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970ம் ஆண்டு காங்கோவில் பரவத்தொடங்கியுள்ளது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மங்கி பாக்ஸ் வைரஸ் Poxviridae குடும்பத்தில் உள்ள Orth poxvirus இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பெரியம்மை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்றில் இருந்து பரவும் பாக்ஸ் நோயைச் சார்ந்தது.