சொட்டு நீர் பாசனம் மூலம் வெற்றிகரமான வாழைச் செய்கை!- முழங்காவிலில் வயல் விழா நிகழ்வு வெகு விமரிசை
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தின் வைத்தியசாலை வீதியில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று
வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். அவரிற்கு உலக விவசாய ஸ்தாபனத்தின் உதவியால் 2017 இல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட்ட 40 டொம் ஜேசி மாங்கன்றுகளை சிறப்பாக பராமரித்துள்ளார்.
மேலும் 20 புதிய மரங்களை தொடர்ச்சியாக கொள்வனவு செய்து நாட்டியுள்ளார். சாதராணமாக மாமரச் செய்கையின் இடைவெளியினை விடுத்து 5 மீற்றர் x 5மீற்றர் இடைவெளியில் பயிரிட்டுள்ளார்.
தற்போது உரிய பயிற்றுவித்தல், கத்தரித்தல் செயற்பாட்டின் காரணமாக காய்கள் உருவாகி அறுவடைக்கு தயாராக உள்ளது.
காய்களில் ஏற்படும் பழ ஈ தாக்கம், பொறிமுறைக்காயம் என்பவற்றை தவிர்க்கவும் தரமான கனியினைப் பெறவும் ஒவ்வொரு காய்களிற்கும் தனித்தனியே
உறையிடப்பட்டிருந்தது. இதனால் தரமான, மஞ்சள் நிறக்கனிகளை பெறமுடியும்.
அத்துடன் PSDG 2019 திட்டத்தின் ஊடாக 75% மானிய அடிப்படையில் பெறப்பட்ட
இழையவளர்ப்பு கப்பல் இன வாழைக்கன்றுகள் செறிவான முறையில் நடுகை
செய்யப்பட்டிருந்தது. இதில் 10 அடி × 5 அடி எனும் அளவில் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் 4 பரப்பில் 220 வாழைக்கன்றுகள் நட முடிகின்றது.
தற்போது உரியவாறு குட்டிகள் முகாமை செய்யப்பட்டுள்ள நிலையில் 6 மாத பயிரான வாழைகள் உள்ளது. இங்கு விசேட அம்சமாக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இதனால் சாரசரி 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்க முடிகின்றது. இது Mini Spray வகைக்குரிய சொட்டு நீர்ப்பாசனமாகும்.
இதனால் அடைப்புகள் ஏற்படுவதும் குறைவு. நாளொன்றிற்கு 32 லிற்றர் நீர்
வாழைக்கு தேவையாகும். அடி மரத்திற்கு துளித்துளியாக நீர் கிடைப்பதாலும் கப்பலில் ஏற்படும் பனாமா நோய் பரம்பல் கட்டுப்படுத்துகின்றது. அத்துடன் நீர்க்காப்பு, போசணை இழப்பு தவிர்க்கப்படுகின்றது.
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர் செய்வது கடினம் என விவசாயிகள் பலராலும் கூறப்படும் நிலையில் குறித்த விவசாயியின் முன்மாதிரி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்நிகழ்வானது முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் திரு. ம. மகிலன
தலைமையில் இடம்பெற்றது. இதில் விருந்தினர்களாக சிறந்த விவசாய நடைமுறைக்குரிய (GAP) விவசாய வியாபார ஆலோசகர் உத்தியோகத்தர திரு. திவாகரன், தொலைக்காட்சி பண்ணை ஒளிபரப்பு சேவை வடக்கு அலகு அபிவிருத்தி அலுவலகர் திரு. ந. குகதாசன், முழங்காவில் பிரதம வைத்திய அதிகாரி க. செல்வநாதன் மற்றும் முழங்காவில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. மேவின்ராஜ் ரோஸ்வேஜினி மற்றும் முழங்காவில் கமக்கார அமைப்பினர், பிரதான பழமரச் செய்கையாளர்கள், விவசாயிகள் எனப்பலரும்
பங்குபற்றியிருந்தனர்.
அதில் மாமர அறுவடை நிகழ்வும், வாழைச் செய்கையில் தொழில்நுட்ப விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
நெடுகை முறைத் தொழில்நுட்பங்களும் செய்முறை ரீதியாக விளங்கப்படுத்தப்பட்டு 11.30 மணிக்கு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.