மாடி கட்டட பள்ளிகளிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி… 7 நாளில் 3 மாணவர்கள் விபரீதம்..
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் 2வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். எனினும் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிவரும் நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரம் கிராமத்தை சேர்ந்த மாதேசன் காமாட்சி தம்பதியின் 16 வயது மகள் கோகிலாவாணி. மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி, வகுப்பறையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு, பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிராம்- ரோஸ்லின் தம்பதியின் மகன் இஷிகாந்த் (வயது 16)
+1 வகுப்பில் பயின்று வருகிறார். நேற்று மாலையில் இஷிகாந்த் பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளான். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்தன தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.