யார் இந்த குமார் குணரத்னம் ? : தர்மன் விக்கிரமரத்ன
பிரேமகுமார் குணரட்ணம் நவம்பர் 18, 1965 அன்று கேகாலை அங்குருவெல்லவில் பிறந்தார்.
தந்தை ஆதிமூலம் பிள்ளை குணரத்தினம் யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர்.
இவர் நாரம்மல சிங்கர் ஷோரூமின் முன்னாள் மேலாளர்.
வள்ளியம்மா ராஜாமணி பதியன் பிள்ளை, கேகாலை உண்டுகுடாவில் பிறந்தவர், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். கேகாலையில் பிறந்து கல்வி கற்ற இவர், கேகாலை புனித மரியாள் தமிழ்க் கல்லூரியில் நன்கு அறியப்பட்ட ஆங்கில ஆசிரியை ஆவார்.
1958ல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
மூத்தவள் ஆஸ்திரேலியாவில் வாழும் சரஸ்வதி.
இரண்டாவது ரஞ்சிதன் (இவர் ஒரு வைத்தியர். ரோகண விஜேவீரவுடன் இருந்த போராளி / போராட்டத்தில் இறந்தார்)
மூன்றாமவர் ஜெயந்தகுமார், சிறுவயதில் கிணற்றில் விழுந்து இறந்தார்.
நான்காவது பிரேமகுமார். (குமார் குணரட்னம்)
ஐந்தாவது, நிரஞ்சனி. இவர் புனித மரியாள் கல்லூரியில் ஆங்கில ஆசிரியை மற்றும் கேகாலை உயர்நிலைப் பள்ளியில் தனது கணவரான அதிபர் எஸ் துரைசிங்கம், குழந்தைகள் மற்றும் தாயுடன் கேகாலையில் உள்ளது குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.
பிரேமகுமார் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி கேகாலை புனித மரியாள் கல்லூரியில் முதலாம் தரத்தில் நுழைந்து 1980 டிசம்பர் 03 ஆம் திகதி வரை கல்வி பயின்றார்.
பின்னர், பின்னவல மத்திய மகா வித்தியாலயத்தில் ஜூன் 15, 1981 முதல் மார்ச் 21, 1985 வரை தனது உயர் கல்வியைப் பெற்றார்,
பின்னர் அவர் E/85/58 இன் கீழ் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் 1985 இல் அனுமதிக்கப்பட்டார்.
பிரேமகுமார் 1981 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பின்னவல கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் போது ஜே.வி.பி.யில் இணைந்தார்.
ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில் ஜே.வி.பி வகுப்புகள் இடம்பெற்றதுடன், விரிவுரை ஒன்றிற்கு உபதிஸ்ஸ கமநாயக்கவும் கலந்துகொண்டார்.
அவர் குமார், குண்டா, கெமுனு, ஆர். எம். டி. டபிள்யூ , தஸ்கொன் , குமார , கருணாரத்ன, தயாலால் , ரத்நாயக்க மற்றும் நோயல் முதலிகே என்றும் அழைக்கப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி பல்லேகல இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய ஜேவிபி குழுவைச் சேர்ந்த பிரேமகுமார், 1987 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி கலகெதரவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரேமகுமார், ஏ செல் மற்றும் ஏ வார்டில் ஜே.வி.பி.யின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார்.
மெகசீன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமகுமார் உட்பட 221 ஜே.வி.பி உறுப்பினர்கள் 1988 டிசம்பர் 13 அன்று ஜே.வி.பி.யால் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் விஜேவீரவுக்கும் , பிரேமகுமாருக்கும் இடையிலான சந்திப்பு 1989 பெப்ரவரி மாதம் பேராதனையில் , ஜேவிபியால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றில் நடைபெற்றது.
பிரேமகுமார் 1989 பெப்ரவரி முதல் திருகோணமலை மாவட்ட ஜே.வி.பியின் ஆயுதப்படையின் செயலாளராக இருந்தார்.
அங்கு திருகோணமலை மாவட்டத்தில் இந்திய ராணுவத்தை சமாளிக்க பிரேமகுமாரை, ரோகண விஜேவீர நியமித்தார். ஜே.வி.பி செயற்பட்ட 19 மாவட்டங்களில் இந்திய இராணுவம் இருந்த ஒரே மாவட்டமாக திருகோணமலை மட்டுமே இருந்தது.
ஜே.வி.பியில் , திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்த போது, பிரேமகுமார் தலைமையில் இந்திய இராணுவம் மற்றும் அவர்களது வாகனங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கண்டி திருகோணமலை வீதியில் கந்தளாய் 93 ஆவது மைல்கல் அருகில் உள்ள முள்ளிப்பத்தனை என்ற இடத்தில் கண்ணிவெடி ஒன்றை அவர்கள் வைத்தனர்.
1989 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் 2வது கொண்டாட்டம் நடைபெற்ற போது திரிகோணமலை ஜெட்டியிலும் மற்றொரு வெடிகுண்டு வைக்கப்பட்டது.
அங்கு 14 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்களால் அங்கு பல ஆயுதங்களைத் கைப்பற்ற முடிந்தது.
1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி ஜே.வி.பி தலைவர் விஜேவீர மற்றும் பொதுச் செயலாளர் கமநாயக்க ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கிழக்கில் ஜே.வி.பி தேசபக்தி கிளர்ச்சியாளர்களால் இந்திய இராணுவத்தின் 63 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 12, 1989 முதல் மூன்று மாதங்களுக்குள், ஜே.வி.பி.யால் நிறுவப்பட்ட தேசபக்தி விடுதலை இராணுவத்தின் கிழக்கு முன்னணி, ஒரு மேஜர் உட்பட இந்திய இராணுவத்தின் 12 அதிகாரிகளையும் , 51 வீரர்களையும் கொன்றதில் வெற்றி பெற்றது.
செப்டம்பர் 24, 1989 அன்று பாலம் பொட்டவூரில் வைத்து பிரேமகுமார் படைகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரேமகுமார் கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது கந்தளாயின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா இருந்தார்.
பிரேம்குமாருக்கு சுவரொட்டிகள் வரையும் திறமை, பேச்சுத்திறன், சிங்களம், தமிழ், ஆங்கில மொழித் திறன், பாடல்களைப் பாடும் திறன் போன்றவற்றால் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய உறவை உருவாக்க முடிந்தது.
பிரேம்குமார் காவலில் இருந்தபோது, லெப்டினன்ட் அதுல மற்றும் பாலித மற்றும் பல இராணுவ வீரர்கள் இலங்கையின் பின்னணி பாடகர்களான , கபுகே, டி. எம், ஜோதிபால போன்ற பாடகர்களின் பாடல்களை இவர் பாடுவதைக் கேட்டுப் மகிழ்ந்தனர்.
ஜனாதிபதி பிரேமதாச 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டைக் கூட்டினார்,
இதில் ஜே.வி.பி பங்குபற்றிய போதிலும் தந்திரோபாய நடவடிக்கையாக ஆரிய புலேகொடவின் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி பங்கேற்றது.
அதன் இரண்டாவது சர்வகட்சி மாநாடு 1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி கூட்டப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட பிரேமகுமார் குணரத்தினம் உட்பட 61 ஜேவிபி கிளர்ச்சியாளர்களை விடுவிக்கக் கோரி இலங்கை முற்போக்கு முன்னணி மகஜர் ஒன்றை கையளித்தது.
அவர்களில் 27 பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணி கிளர்ச்சியாளர்களாக இருந்தனர். இதன் விளைவாக, பிரேமகுமார் மற்றும் பலர் 1990 பெப்ரவரியில் கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், கப்டன் ஜயந்த கொத்தலாவல தலைமையில் அம்பேபுஸ்ஸ முகாமில் பிரேமகுமாரும் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் இராணுவத்தினருடன் கொழும்புக்கு வந்த போது பிரேமகுமார் திட்டமிட்டு 1991 மார்ச் மாதம் காணாமல் போனார்.
பின்னர், மாவடவில, காலி, தம்புள்ளை, நீர்கொழும்பு, பிலியந்தலை போன்ற பல இடங்களில் இரகசியமாக மறைந்திருந்து 1991 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஜேவிபியின் மறுசீரமைப்பிற்கு பத்தேகமவில் தீவிரமாக பங்களித்தார்.
பிரேமகுமாரின் தந்தை ஆதிமூலம் நவம்பர் 17, 1994 இல் இறந்தார் மற்றும் அவரது இறுதி சடங்குகள் கேகாலை ரங்வல மயானத்தில் செய்யப்பட்டது மற்றும் ஜேவிபி அரசியலில் இரகசியமாக ஈடுபட்டிருந்த பிரேமகுமார் தனது பாதுகாப்பிற்காக அங்கு வரவில்லை.
இரண்டாவது கிளர்ச்சியின் தோல்வியின் பின்னர், சோமவன்ச 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஜே.வி.பியை ஓரளவிற்கு மீள ஸ்தாபிக்க முடிந்தது,
மேலும் அது 1994 இல் இலங்கை முற்போக்கு முன்னணியின் தேசிய இரட்சிப்பு முன்னணியின் மூலம் பிரபலமான அரசியல் நீரோட்டத்தில் இணைந்தது.
1992 இல், 2வது கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர் சேனாதீர குணதிலக்க, ஜி. குலரத்ன, கமல் தேசப்பிரிய, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜேசிங்க, விமல் வீரவன்ச மற்றும் பலருடன் உறவுகளை கட்டியெழுப்ப பிரேமகுமாரால் முடிந்தது.
1991ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்த கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் ‘பேச்சு வார்த்தைகளில் ‘ ஈடுபட்டார்.
சோமவங்சவின் ஆலோசனையின் பிரகாரம், கட்சியின் பெரியவர்களைச் சந்தித்து உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டார், அதன் பின்னரே ஜே.வி.பி. கட்சியாக உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது.
1992 முதல் காதலித்த பெண்ணான ஜே.வி.பி 2 வது கிளர்ச்சியின் மாணவர் பிரிவில் செயல்பாட்டாளராக இருந்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ மாணவி சம்பா சோமரத்ன அல்லது மயூரியை திருமணம் செய்து கொண்டார்.
பிரேம்குமாரின் சகோதரர் ரஞ்சிதன் , சம்பாவுக்கு புரட்சி அரசியலுக்கான முதல் 5 வகுப்புகளை கற்றுக் கொடுத்தார்.
சம்பாவும் , ராகம 1990 இல் பேரலந்த வீட்டில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். நாத்தாண்டிய, போத்தல்கம சந்தியில் வசிக்கும் சம்பாவின் தாயார் நன்கு அறியப்பட்ட ஆங்கில ஆசிரியை ஆவார்.
1994 பொதுத் தேர்தலில், சம்பாவும் குருநாகல் மாவட்டத்தில் தேசிய இரட்சிப்பு முன்னணியின் கீழ் ஜே.வி.பியில் போட்டியிட்டார்.
அந்த 1994 பொதுத் தேர்தலில் ஜே.வி.பி முழு பொறுப்பும் பிரேமகுமார் குணரத்னம் தலைமையில் நடந்தன. நந்தன குணதிலக்க, சேனாதிர குணதிலக்க, விமல் வீரவன்ச, தீபால் குணசேகர ஆகியோர் இணைந்திருந்தனர்.
ஆனாலும் ஜே.வி.பியால் அந்த பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
1994 இல், இலங்கை முற்போக்கு முன்னணி கொழும்பு பொது நூலகத்தில் கட்சித் தேர்தலை நடத்தி மாரவிலவில் பிறந்த பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ மாணவர் மத்தியூ பெர்னாண்டோவை அதன் செயலாளராக நியமித்ததுடன், அவர் மூலம் ஜே.வி.பிக்கு இலங்கை முற்போக்கு முன்னணியின் சட்டப்பூர்வ அதிகாரம், 1994 பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல், மே 15, 1995 தங்காலையில், மாநாடு நடத்தி ஜே.வி.பி.யின் சட்ட உரிமைகளை உறுதி செய்தல், 1997 உள்ளூராட்சித் தேர்தல், 1999 மற்றும் 2005 ஜனாதிபதித் தேர்தல்கள், 2000, 2001, 2004 பொதுத் தேர்தல்கள் என பெரும் பாலான நிகழ்வுகளுக்கு பிரேமகுமார் தலைமை ஏற்று பங்காற்றினார்.
2001 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி ஜே.வி.பி தலைவர் சோமவன்ச இலங்கை வந்த போது மாலம்பேயில் தங்கியிருந்த போது அவருடைய பாதுகாப்பும் பிரேமகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேமகுமார் 1994 முதல் மார்ச் 2012 வரை ஜே.வி.பி அரசியல் குழு உறுப்பினராக செயல்பட்டார்.
சில காலம் கல்வி மற்றும் மாணவர் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அச்சுறுத்தல் ஏற்பட்ட போது ஜே.வி.பி ரெட் ஸ்டார் திட்டத்தின் கீழ் மீன்பிடி அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கிய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களில் நிவாரணத் திட்டத்தின் முன்னோடியாகவும் பிரேமகுமார் இருந்தார்.
பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆதரித்து அரசாங்கத்துடன் இணைந்து உத்தியாக செயற்பட வேண்டும் என ஜேவிபி அரசியல் குழு முன்மொழிந்தது.அந்த பிரேரணைக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன.
எதிராக வாக்களித்த பிரேமகுமார், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடாது என்றார்.
பின்னர், ஜே.வி.பி.யின் உள் பிரச்சினை காரணமாக 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா செல்ல நேரிட்டது.
கராப்பிட்டிய, கேகாலை, வெலிசறை வைத்தியசாலைகளில் வைத்தியராகப் பணிபுரிந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் அவருடன் இணைந்து நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றனர் .
மீண்டும் பிரேமகுமார் செப்டம்பர் 14, 2011 அன்று இலங்கை திரும்பினார்.
தனது குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய சம்பா சோமரத்ன, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 10 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
அதில், தான் குமார் குணரட்னம் என்ற யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது பிரேமகுமாரின் கடவுச் சீட்டு நோயல் முதலிகே என்ற பெயர் இருந்தது.
ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய பின்னர், பிரேமகுமார் மற்றும் சிலரின் தலைமையில் உருவாக்கப்பட்ட முன்னணி சோசலிச கட்சியின் முதல் மாநாடு 2012 ஏப்ரலில் நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் 2012 ஏப்ரல் 07 காலை கிரிபத்கொட, கெமுனு மாவத்தையில் வைத்து குமார் கைது செய்யப்பட்டார்.
நோயல் முதலி என்ற பெயரில் இருந்த பிரேமகுமார் அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தமையால், அவுஸ்திரேலிய தூதுவரின் தலையீட்டின் பின்னர், 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி இரவு விடுவிக்கப்பட்டார்.
ஜே.வி.பி.யின் வரலாற்றில் 1986 முதல் 2012 வரையான 26 வருடங்கள் ஜே.வி.பி.க்காக பல தியாகங்களை பிரேமகுமார் குணரட்னம் செய்துள்ளார் என்பது இரகசியமல்ல.
17557167F இலக்கத்துடன் கூடிய அவுஸ்திரேலிய அடையாள அட்டையுடன் , நோயல் முதலி என்ற பெயரில் 1016123 என்ற கடவுச் சீட்டை பயன்படுத்தி பிரேமகுமார் இலங்கை வந்திருந்தார்.
முதலாவதாக, 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, உயிர் பாதுகாப்பு என்று கூறி, K 0257946 என்ற இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பிரேமகுமார் குணரத்தினம் , பின்னர் என். 1938494 இலக்கம் கொண்ட கடவுச்சீட்டை 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி தஸ்கோன் முடியன்சேலையின் தயலால் என்ற பெயரில் பெற்றிருந்தார்.
மீண்டும் பிரேமகுமார் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்போடு இலங்கை திரும்பினார்.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியின் வேட்பாளரான துமிந்தவும் நாகமுவவை ஆதரித்தார்.
இலங்கைக்கு வந்த பின்னர் குடிவரவுத் திணைக்களம் குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் விசா காலத்தை நீடிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் இலங்கை குடியுரிமை பெறுவதற்காக பரம்பரை இலங்கை குடியுரிமை சான்றிதழை பூர்த்தி செய்து 2015 பெப்ரவரி 18ஆம் திகதி சமர்ப்பித்தார்.
தன்னை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கையும் விடுத்தார்.
அதில், குடிவரவுத் திணைக்களம், குடிவரவுச் சட்டத்தின் 8, 20, 21 ஆகிய பிரிவுகளின்படி, அது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உரியது எனத் தெரிவிக்கப்பட்டதோடு , கோரிக்கையை தாமதப்படுத்தியதால், காலம் முடிந்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
2015 ஜனவரி முதல் , 2015 நவம்பர் 4 ம் திகதி வரை, அவர் இலங்கைக்கு வந்ததிலிருந்து , குமார் , முன்னணி சோசலிச கட்சியின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து அதிகாலை 3 மணியளவில் சாரதியுடன் வேனில் கேகாலை இல்லத்திற்கு வந்துள்ளார்.
அன்று மாலை கண்டிக்கு போக வேண்டி இருந்தது.
அப்போது, முன்னிலை சோசலிசக் கட்சியின் பல மாணவர் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு பிரேமகுமார் தலைமை தாங்கினார்.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி பிரேமகுமார் கைது செய்யப்பட்டு, அவர் இலங்கைப் பிரஜை இல்லை எனக் கூறி அவரை இலங்கையை விட்டு நாடு கடத்த முயற்சித்தமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவமாகும்.
கைது செய்யப்பட்ட பிரேமகுமார் பின்னர் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2015 நவம்பர் 18 ஆம் திகதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக இலங்கையில் தங்கிய குற்றத்திற்காக கேகாலை நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அனுராதபுரம் சிறையில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர், 2016ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியுடன் ஒரு வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்ய இருந்தார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அதாவது 02 டிசம்பர் 2016 அன்று பிரேமகுமார் குணரட்ணம் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
22 ஜூன் 2017 அன்று, பிரேமகுமாரின் ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்தாகி , இலங்கையின் முழு குடியுரிமை வழங்கப்பட்டது.
அன்று முதல் முன்னணி சோசலிச கட்சி மூலம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் பிரேமகுமார்.
அவரது மனைவி சம்பாவும் இரண்டு குழந்தைகளும் 2022-ம் ஆண்டான தற்போதும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள்.
– தர்மன் விக்கிரமரத்ன
தமிழில் : ஜீவன்