நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறி டெல்லி, மகாராஷ்டிரா உட்பட 9 இடங்களில் நுபுர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்போது, ​​தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இதை மறுத்ததோடு, உங்களுடைய வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டது என மிக கடுமையாக சாடியது.

இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றியமைக்க உத்தரவிடக் கோரினார். இதையடுத்து, ஒரே இடத்திற்கு வழக்கை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

Leave A Reply

Your email address will not be published.