ரெய்டில் கட்டுக்காட்டாய் சிக்கிய பணம் – அடுத்த நாளே அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை
மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அம்மாநில அமைச்சர் பார்தா சாட்டர்ஜி, அவரது நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி ஆகியோரை ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைது செய்துள்ளது. நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 மதிப்பிலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அமைச்சரும் அவரது கூட்டாளி அர்பிதா முகர்ஜியும் கொல்கத்தாவில் உள்ள பாங்கஷால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பின்னர் இவர்களை விசாரணை காவலுக்கு எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநில கல்வித்துறையில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த ஆதாரத்தின் பேரில் நேற்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அம்மாநில கல்வி அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி, மேற்கு வங்க ஆரம்ப கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மானிக் பட்டாச்சாரியா, மேலும் முக்கிய அமைச்சர்களுக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில் தான் அர்பிதா முக்கர்ஜி என்பவர் வீட்டில் மட்டும் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுக்கட்டாய் குவிந்திருந்த நோட்டுக்களை பார்த்து மலைத்துப்போன அதிகாரிகள் வங்கி அலுவலர்களை அழைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வாங்கி பறிமுதல் செய்த ரொக்கத்தை கணக்கிட்டுள்ளனர்.
மாநில கல்வித்துறையின் ஆசிரியர் பணிக்கான தேர்வில் பெரும் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்து இதை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. நேற்று சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஊழல் தொடர்பான ஆவணங்கள், வெளிநாட்டுப் பணம், தங்கம்,எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ள நிலையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி இந்த சோதனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சோதனையில் சிக்கிய அர்பிதா முகர்ஜி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் விழா ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது வெறும் ட்ரெய்லர் தான் உண்மையான படம் இனி தான் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இது மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.