ரணிலுக்கு எதிராக விக்கி போர்க்கொடி.
“ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணி நேரம் நிறைவடைவதற்குள் காலிமுகத்திடலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர்கள் தாமாகவே வெளியேற ஆயத்தப்படுத்துகையில் இந்தத் தாக்குதல் நடந்தமை தன் வீட்டை எரித்தமைக்கான ரணிலின் பதிலடியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்ப்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறுவதற்காக மென்வலு முயற்சிகளை பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டமை ஏமாற்றத்தையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.
முன்னைய ஜனாதிபதி இருந்தபோது பிரதமராகப் பதவியேற்ற பின்னர் போராட்டம் காலிமுகத்திடலில் நடைபெறுவதை அனுமதிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் காலிமுகத்திடல் போராட்டம் தொடரலாம் என்றும் ரணில் அறிக்கை விட்டிருந்தார். அத்துடன் முன்னைய அரசு இருந்தபோது, மே 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியபோது அதனைக் கண்டித்திருந்த ரணில், பிரதமரும், ஜனாதிபதியும் பதவி விலக வேணடும் என்று கோரியிருந்தார். ஆனால், அதே ரணில் தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் பொதுமக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொண்ட இந்த வன்முறை பிரயோகம் கவலைக்கிடமானது.
தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட 1983 ஜூலை வன்செயல்களின் 39 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறித்த வன்செயல்களின் தாக்கம் இன்றும் எம் மக்கள் மனதில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டேதான் உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலின்போது ரணிலுக்கு நான் வாக்களித்ததன் காரணம் அவர் பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நாட்டின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வொன்றைக் கொண்டு வந்து பொதுமக்களைப் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் தானே அன்றி, அடக்குமுறைகள் ஊடாக பொதுமக்களின் போராட்டங்களை நசுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு புதிய ஜனாதிபதியும் அரசும் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறி அரசு சுமுகமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கும் வகையில் தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தபோது பொறுமை இழந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வன்முறை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கேட்பது ஜனாதிபதியின் காதில் விழும் என்று எதிர்பார்க்கின்றேன்” – என்றுள்ளது.